Monday, March 11, 2013

நாம் எங்கே இருக்கிறோம்?

இப்போது ஒரு எளிய கேள்வி. நாம் எங்கே இருக்கிறோம்?
இந்த கேள்விக்கு அறிவியலின் விடையை அறிந்து, அசைபோட்டு பார்த்தீர்களேயானால் அதில் ஒரு பிரம்மாண்டமான ஞானம் அடங்கியிருப்பது உணரப்படும் (இதை பலரிடம் நேரடியாக நான் கேட்டதுண்டு. விடைகள் வெகு சில முறைகள் மட்டுமே துல்லியமாக வந்தன. பல நேரங்களில் அவை பரிதாபப்படும் வகையில் இருந்தன). முக்கியமான விஷயம், பதிலை விரிவாக்கிக்கொண்டே போக வேண்டும். உதாரணம், நாம் இருப்பது இந்தியா என்று பதில் வந்தால், இந்தியா எங்கே உள்ளது? என்று கேட்க வேண்டும். ஒரு முறை உங்களையே நாம் எங்கே இருக்கிறோம்? என்று கேட்டுக்கொண்டு, உங்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று பாருங்கள். விடை கீழே உள்ளது. ஒப்பிட்டு கொள்ளலாம். ஒரு வகையில் இது உங்கள் முகவரியை நீட்டிக்கொண்டே செல்வதை போலத்தான்.
1. ஊர்
2. மாநிலம்
3. நாடு
4. கண்டம்
5. பூமி
நான் இந்த கேள்வியை சுமார் 100 தமிழக சாமான்யர்களிடம் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 50 பேர் இத்துடன் நின்றுவிட்டனர்.

அதாவது பூமி எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு "கீழே" என்றுதான் பதில் வருகிறது. உண்மையில் பூமி இருப்பது,
6. சூரிய குடும்பம் (சூரிய குடும்பத்தில் பூமி உட்பட மொத்தம் 8 கிரகங்கள் உள்ளன. அவை சூரியன் எனும் நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. பூமி மூன்றாவது கிரகம்.http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a9/Planets2013.jpg
உபரி தகவல்: ஒளி/வெளிச்சம் என்பது ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். இருந்தும், அது சூரியனில் இருந்து பூமியை அடைய 500 நொடிகள் ஆகின்றது. நினைத்து பாருங்கள் பூமி - சூரியன் இடைவெளியை)
7. பால்வழி திரள் (இது சூரியன் உட்பட கிட்டத்தட்ட 400 பில்லியன் (1பில்லியன் என்பது 100 கோடி) நட்சத்திரங்களை கொண்ட ஒரு நட்சத்திர கூட்டம், சூரியன் இதன் மையத்தை சுற்றி வருகிறது.
உபரி தகவல்: ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒளி, ஒரு வருடத்தில் சுமார் 10 ட்ரில்லியன் கி.மீ (1 ட்ரில்லியன் என்பது 100000 கோடி) பயணிக்கும். இது ஒரு ஒளி ஆண்டு ஆகும். பால்வழி திரளின் விட்டம் சுமார் 120000 ஒளி ஆண்டு) http://casswww.ucsd.edu/archive/public/tutorial/MW.html

8. பேரண்டம்/ பிரபஞ்சம் (இதற்கு இன்னொரு அர்த்தம் 'அனைத்தும்'. இதில் நாம் வாழும் பால்வழி திரள் போன்று கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதன் எல்லை இன்னும் கண்டுபிக்கப்படவே இல்லை)
இதுதான் அறிவியல் சொல்லும் விடை. மெல்ல மீண்டும் அசைபோட்டு பாருங்கள்.
நாம் எங்கே இருக்கிறோம்? எல்லையில்லா பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு தொலைந்த மூலையில் நகர்ந்துகொண்டிருக்கும் சிறு பந்தின் மீது... ஹ்ம்ம்ம் அதில்தான் எத்தனை எத்தனை வாழ்க்கை.

மேலும் தெரிந்துகொள்ள: http://www.youtube.com/embed/17jymDn0W6U
http://www.britannica.com/EBchecked/media/159542/Scale-of-the-universe