Thursday, October 9, 2014

தி எலமண்ட்ஸ்...

பஞ்சபூதங்களால் ஆனதுதான் உடல் என்று சொல்வார்கள். இந்தியாவில் இவை நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம். அனால் சீனாவில் காற்றையும் ஆகாயத்தையும் எடுத்துவிட்டு உலோகத்தையும் மரத்தையும் சேர்த்து நிலம், நீர், உலோகம், மரம் மற்றும் நெருப்பு என்று சொல்லி இருக்கிறார்கள்! இன்னும் சில நாடுகளில் ஆகாயத்திற்கு பதிலாக ஆவியை சொல்வதும் உண்டு!
உண்மை என்ன?
வீட்டை கட்ட அடிப்படையான தேவை செங்கல், சிமென்ட், மணல், ஜல்லி, கம்பி, ஆகியன. அதே போல உடல் எவற்றால் ஆனது என்று நம் முன்னோர்கள் உட்கார்ந்து யோசித்ததில் அவர்கள் அடைந்த பதில்கள்தான் இந்த ஐந்து அடிப்படை கட்டுமான அம்சங்கள். பஞ்சபூதங்கள் என்று வணங்கத்தக்க பெயர் ஒன்றும் கொடுத்துவிட்டார்கள். அவர்களால் இதற்கு மேல் அடிப்படையாக செல்ல இயலவில்லை. அவ்வளவுதான். கடந்த 400 வருடங்களாக அறிவியல் இதே கேள்விக்கான பதிலை தேடி கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் வெகு ஆழமாக.
நீர் என்பது ஒரு பொருள் அல்ல ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்னும் தனிமங்கள் சேர்ந்தது அது (H2O). காற்று என்பது நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுநிலை தனிமங்களால் ஆன கலவை. நிலம் என்பது பல தனிமங்களின் திடக்கலவை. கல்லும் மண்ணும் பெரும்பாலும் சிலிகன் மற்றும் ஆக்சிஜன் தனிமங்களின் கலவை (SiO2). இப்படி இரும்பு, அலுமினியம், தாமிரம் என பலவகை தனிமங்கள் நிலத்தில் உள்ளன (Fe, Al, Cu, etc). மொத்தம் எத்தனை தனிமங்கள் தெரியுமா? 92. இவை தவிர இன்னும் செயற்கையாகவும் சில தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் அவற்றின் பண்புகளின் அடிப்படையில் அழகாக தொகுத்தும் ஆகிவிட்டது. அதுதான் தனிம வரிசை அட்டவணை (Periodic Table of Elements). நம் உடலுக்கு இந்த எல்லா தனிமங்களும் தேவை இல்லை. அவற்றில் சில மட்டும் இருந்தாலே போதும்.
நெருப்பு ஒரு பொருளே அல்ல. அது ஆற்றல். எந்திர ஆற்றல், ஒளி ஆற்றல், வேதி ஆற்றல், மின் ஆற்றல் என நீளும் ஆற்றலின் பல வடிவங்களில் ஒன்று நெருப்பு. ஆகாயம் என்பது ஏதுமற்ற வெளி.
பஞ்சபூதங்கள் என்ற நமது மரபான ஞானத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளும் காரணம் அது பல நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்டதால்தான். Periodic Table நமது சமீபத்திய அறிவு என்பதால் அதை சாதாரணமாக கடந்து செல்கிறோம். ஆனால் அது ஆழமான உண்மை. அதை வணங்க வேண்டாம். அறிந்து கொள்வதே போதும். அறிவியல் அறிதலும் ஒரு ஆன்மிக பயணமே.