Tuesday, June 10, 2014

அக்யூமுலேட்டட் தவறுகள்



அப்பட்டமாக தெரிகின்ற எல்லா விஷயங்களும் பிரபஞ்சத்தின் உண்மைகளை சூட்சுமமாக வெளிக்காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. உதாரணமாக அப்படி ஒரு அப்பட்டமாக தெரிகின்ற உண்மைதான் மனிதர்கள் பாலூட்டி வகையை சார்ந்த விலங்குகள் என்பது. முட்டையிலிருந்து வராமல் குட்டியாக பிறந்து கொஞ்ச நாள் பால் குடித்து வளர்ந்தவர்கள். இந்த உண்மையை யாரும் மறுக்க போவதில்லை. ஆனால் இந்த விஷயத்தை இன்னும் ஆழமாக புரிந்துகொண்டால் எத்தனையோ சுவாரஸ்யங்கள் இருப்பது தெரிய வரும். ஒரு கேள்வி இன்னொரு கேள்விக்கு இட்டுச்செல்லும். பகுத்தறிவின் முதுகெலும்பே அவ்வாறான கேள்விகள்தானே. அவற்றின் பதில்களை தேடுவதில், மிக உருப்படியான சில நன்மைகளும்  உள்ளன.
என்ன நன்மைகள்? மிக முக்கியமானது இதுதான். இன்னும் நம்மை பற்றி நாம் மேலும் புரிந்து கொள்ள, அதன் மூலம் சிறந்த அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளை உருவாக்க இந்த புரிதல்கள் நிச்சயம் தேவை. அதாவது, இந்த புரிதல்கள் மூலம், லஞ்சம், ஊழல், கொலை, திருட்டு, கற்பழிப்பு என அடுத்தவர்களை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள் செய்யும் அட்டூழியங்கள் ஏன் நடக்கின்றன என்பது முதற்கொண்டு  அன்றாட வாழ்வின் நல்லது கெட்டது போல நம் மனதை திடமாக ஆட்கொண்டிருக்கும் விஷயங்கள் வரை பல விஷயங்களுக்கு அடிப்படை காரணங்கள் இன்னும் தெளிவாக புரிய வரும். மொத்தத்தில் இந்த புரிதல்கள் நம்மை சிறந்த உலகை கட்டமைப்பதற்கு கட்டாயம் உதவியாக இருக்கும்.
இந்த உலகியல் நன்மைகளை தாண்டி பெரிதாக படுகின்ற நன்மை என்ன என்றால் இந்த புரிதல்கள்  வாழ்வின் மீது, உலகின் ஆச்சர்யம், நிதர்சனம் மற்றும்  நிரந்தரமின்மை மீது  ஒரு தீராக்காதல் தந்துவிடுகின்றன. புதிர்களை புரியவைத்து வியந்து நிற்கும் ஒரு ஆனந்த நிலையை தந்து அதையே நிரந்தர இயல்பு நிலை ஆக்கிவிடுகின்றன. இன்னும் புரிந்துகொள்ளாத புதிர்களை காட்டி வியப்பை நோக்கி தூண்டப்பட்ட ஒரு நிலையை தந்து நம்மை ஆர்வம் குறையாத  குழந்தையாக மாற்றி விடுகின்றன. மொத்தத்தில் இருப்பின் பிரம்மாண்டம் புரிந்த ஒரு போதைக்களிப்பான வாழ்வு தருகின்றன. ஒருவகையில் இந்த கட்டுரை இந்த ஆனந்தத்தை பகிரும் ஆசையின் வெளிப்பாடுதான்.
என்ன அந்த புரிதல்கள்? அப்பட்டமாக தெரிகின்ற உண்மைதான் மனிதர்கள் பாலூட்டி வகையை சார்ந்த விலங்குகள் என்பது. ஆனால் ஏன் எல்லா பாலூட்டி விலங்குகளும் ஒரே மாதிரி இல்லை. அவற்றிற்கிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன என்பது தெரிந்த விஷயமே. உதாரணமாக   உலகில் பெருங்குரங்குகள் என சில வகை குரங்குகள் உள்ளன. அவைதான் போனோபோ, ஒரங்குட்டன், கொரில்லா, சிம்பன்சி ஆகியன. மனிதனும் இந்த வகை பெருங்குரங்குதான். ஏன் என்றால்  நம்மை போன்றே குட்டி போட்டு பால் கொடுக்கும் பல விலங்குகள் இருந்தாலும் நமக்கு மிகவும் நெருங்கிய உருவத்துடன் இந்த நான்கு  பெருங்குரங்குகளும் (Great apes) உள்ளன. நம் அளவிற்கில்லை என்றாலும் கூட இவை நான்கும் அறிவிலும் பல மிருகங்களை விட கொஞ்சம் ஸ்மார்ட்தான்.



போனோபோ
ஒரங்குட்டன்
கொரில்லா
சிம்பன்சி
மனிதன்



இந்த குரங்குகளுக்கும்  இன்னும் மற்ற பாலூட்டி மிருகங்களுக்கும் பாலூட்டி அல்லாத உயிரினங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளும் வித்தியாசங்களும் ஏன்?   இந்த கேள்விகள் எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் ஒரு கேள்வியாக தெரியும். அதுதான் ஒரு உயிரியின் உடல் அமைப்பும் செயல்பாடுகளும் எதை பொறுத்துதான் உள்ளன? என்பது. இதற்கு பதில் தெரிய கொஞ்சம் அறிவியல் உள்ளே செல்ல வேண்டும்.
அறிவியல் தரும் பதில்தான் டி.என்.எ. (இதற்கு மேல் கொஞ்சம் சரவெடி பாணியில் தகவல்கள் வரலாம். கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனத்துடன் படித்தால் புரிவது  பெரிய கடினம் இல்லை)
டி.என்.எ வின் முகவரி
முதலில் டி.என்.எ எங்கு உள்ளது என்று பாப்போம். டி.என்.எ வின் முகவரி இதுதான்.
உடல் முழுவதும் செல்களால் ஆனது.  அதாவது ஒரு கிராம் சதையையோ ஒரு துளி இரத்தத்தையோ எடுத்துக்கொண்டால் அவற்றில்  சில ஆயிரம் செல்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு செல்லிற்கும் உள்ளே  உட்கரு ஒன்று உள்ளது. இந்த ஒவ்வொரு உட்கருவிலும் சில குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமொசொமுக்குள்ளேயும் இருப்பதுதான் டி.என்.எ. இதுதான் டி.என். வின் முகவரி.  ஆக உடல் முழுவதும்  அதன் முகவரிதான் இல்லையா? (இந்த படம் பார்த்தால் டி.என்.எ வின் முகவரி இன்னும் எளிமையாக புரிந்துவிடும்)


டி.என்.எ வும் ஜீனும்:

இது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிக மிக மிகப்பெரிய மூலக்கூறு. அதன் பிரம்மாண்டத்தை உணர கொஞ்சம் தகவல்கள்.
நியூக்ளியோடைட் என்று ஒரு மூலக்கூறு. பல அணுக்கள் சேர்ந்து உருவானது இது. இதில் சில வகைகளும் உள்ளன. இந்த மூலக்கூறுகள் ஒன்றிணைந்து நீண்ட ஏணி போன்ற அமைப்பில் சேருகின்றன. (சோடியமும் குளோரினும் சேர்ந்து சோடியம் குளோரைடு உருவாவதை போலத்தான். ஆனால் அவ்வளவு சிம்பிள் அல்ல.) இரண்டு நியூக்ளியோடைட்களின் இணைப்பு இந்த டி.என்.எ ஏணியின் ஒரு படி ஆகின்றது. இந்த ஏணியின் உயரம் கிட்டத்தட்ட 100 நேனோ மீட்டர். இது ஒரு தலைமுடியை விட பல ஆயிரக்கணக்கான மடங்கு சிறிய உயரம்தான். ஆனால் அதற்குள்ளாகவே 100 மில்லியன் ஏணிப்படிகள் இருக்கும். இந்த முழு ஏணிதான் டி.என்.எ. கொஞ்சம் டீப் பரீத் எடுத்து விட்டு இந்த என்னை கிரகிக்க முயன்று பாருங்கள். டி.என்.எ. வின் பிரம்மாண்டம் புரியும்.

டி.என்.எ. வின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வேலை செய்கிறது. இந்த இடங்களை தான் ஜீன்கள் என்று தனி பெயருடன் அழைக்கிறோம். அதாவது டி.என்.எ வின் சிறு பகுதிகள்தான் ஜீன்கள். ஒவ்வொரு ஜீனும் சில ஆயிரம் ஏணிப்படிகள் கொண்டது.


டி.என்.எ வின் வேலை:

கம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவில் ஒரு சிறு இடத்தை பிடித்து கொண்டிருக்கும் ஒரு சாப்ட்வேர் எப்படி ஒரு சூப்பர் வேலையை செய்கிறதோ அதைப்போல, ஒவ்வொரு டி.என்.எ வின் ஒரு மூலையில் உள்ள ஒவ்வொரு ஜீனுக்கும் ஒரு வேலை உண்டு. இந்த ஜீன்கள் செய்யும் சூப்பர் வேலைகள்தான் உயிரிகளின் அமைப்பும் செயல்களும்.
உதாரணமாக நமது முக அழகு எவ்வளவு முக்கியம் நமக்கு? அதற்கான  கண் மூக்கு வாய் ஆகியவற்றின் வடிவங்களை நிர்ணயிப்பதே ஜீன்கள்தான். மேலும் கை, கால்கள், மார்பு, இடை, மர்ம பிரதேசங்கள் என எல்லா உடல் உறுப்புகளின்  அமைப்பு, வடிவம், உயரம், நிறம் போன்றவற்றை நிர்ணயிப்பதும் அவற்றிற்கான ஜீன்கள்தான். குரல், நடை அழகு, பரம்பரை நோய்கள் போன்றவற்றிற்கும் அதற்கென அர்பணிக்கப்பட்ட ஜீன்கள் உள்ளன. இந்த எல்லா ஜீன்களும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு செல்வதால்தான் இந்த எல்லா பண்புகளும் பெற்றோரை போலவே பிள்ளைகளுக்கும் இருக்கின்றன.
ஒவ்வொரு உயிரினத்திற்க்கும் ஒவ்வொரு பாகமும் வித்தியாசப்படுவதற்க்கு கூட இந்த ஜீன்கள்தான் காரணம்.
முக்கியமான இன்னொரு விஷயம். தினம்தோறும் நாம் எடுக்கும் முடிவுகளை, நம் தன்னுணர்வையும் தாண்டி நாம் நினைத்துகூட பார்த்திராத அளவிற்கு கட்டுப்படுத்துபவை கூட ஜீன்கள்தான் என்பதை உளவியல் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. உதாரணத்திற்கு Daniel Kahneman போன்றோரின் சமீபத்திய ஆராய்ச்சிகளை சொல்லலாம்.
உலகில் நடக்கும் குற்றங்களை எடுத்துக்கொள்வோம். இங்கே இப்படி குற்றம் செய்தால் என்ன நடக்கும் என்ற இடம், பொருள், விளைவு என தர்க்கம் பேசும் தன்னுணர்வையும் மீறி குற்றங்கள் செய்யும் முடிவுகள் எடுக்கப்படுவதும் இப்படிப்பட்ட ஜீன் செய்யும் செலுத்துதல்தான். இந்த மனநிலைகள் பெற்றோரிடமிருந்து மட்டும் வருவன அல்ல. வளரும் சூழலும் ஜீன்களின் மேல் பெரும் பாதிப்பை செலுத்துகிறது.
ஆக ஒரு மனிதனின் குணநலன்களுக்கான காரணங்கள் இரண்டுதான். ஒன்று பிறப்பு இன்னொன்று வளரும் சூழ்நிலை. பிறப்பை பெரிதாக நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சூழலை செதுக்குவதே நாம்தான். மொத்தத்தில் சிறந்த உலகை நோக்கிய மனித பயணத்தின் பெரும்பகுதி குழந்தைகளுக்கு சிறப்பான வளரும் சூழலை தருவதில்தான் இருக்கிறது.

டி.என்.எ வின் தொழில்நுட்ப அடிப்படை:

ஜீன்கள் வழியாக கொண்டு செல்லப்படுவது இந்த உருவ மற்றும் குணாதசிய பண்புகள் பற்றிய தகவல்கள்தான் என்று புரிந்திருக்கும். இந்த தகவல்களை ஜீன்கள் எப்படி கொண்டு செல்கின்றன? இதை புரிந்துகொள்ள ஒரு உதாரணம் பார்ப்போம்.  நம் கையில் இரண்டு பந்துகள் எடுத்துக்கொண்டால், நாம் என்னென்ன சுமப்பதாக அர்த்தம்?  அந்த பந்துகளின் எடையை மட்டும் சுமக்காமல், இரண்டு என்ற எண்ணிக்கையையும் சேர்த்து சுமக்கின்றோம் அல்லவா? இதை போலத்தான் டி.என்.எ தனது மூலக்கூறுகளின் அமைப்புமுறை மூலம் தகவல்களை கையாளுகிறது. கொஞ்சம் ஆழமாக பார்த்தால் தகவல் என்பது எப்போதும் இப்படி ஒரு உருவுள்ள விஷயங்களில்தான்  வாழ்கிறது. இப்படித்தான் டி.என்.எ ஏணியின் ஒவ்வொரு படியும் தகவல்களை பாதுகாத்து சேமித்து வைத்து சுமந்து செல்கின்றன.

டி.என்.எ வின் சிறப்பம்சம் :

டி.என்.எ விற்கு மரணமில்லை. அது தொடர்ந்து வாழ்கிறது. ஏனென்றால் அது தன்னை அப்படியே பிரதி எடுத்து கொள்ளும் ஒரு தனிச்சிறந்த பண்பை உடையது. பிரதி எடுத்தல் என்றால் சாதாரணமாக இல்லை. அதிலுள்ள மில்லியன் கணக்கான நியூக்ளியோடைட் ஏணிப்படிகளும் பிரதி ஆகின்றன. 
படிவளர்ச்சியின் மெக்கானிசம்: 
      இந்த பிரதி எடுத்தலின் போது சில தவறுகள் நிகழலாம். அதற்கு சில காரணங்கள் உண்டு. (இந்த தவறை   ம்யூடேஷன் (Mutation) என்பார்கள். நாம் ‘தவறு’ என்ற பெயரிலேயே தொடருவோம்). தவறுகளுக்கான காரணங்களுக்குள் இப்போதைக்கு செல்ல வேண்டாம். தவறுகள் என்ன செய்கின்றன பற்றி மட்டும் பார்ப்போம். இந்த தவறு எதோ ஒரு ஜீனில் உள்ள ஒரு ஏணிப்படியில் நிகழ்ந்தால் அந்த ஜீனில் உள்ள தகவல் சற்று மாற்றமடையும். இது கடைசியாக அந்த  ஜீனுக்கு சொந்தமான வேலையையே சற்று மாற்றமடைய செய்யும். உதாரணத்திற்கு இந்த மாற்றம் பார்வைக்கான ஜீனில் நடந்தால் பார்வை சற்று மாறும். ஆனால் அது நல்லதா கேட்டதா என்பது ஜீனுக்கு தெரியாது. அதை இயற்கைதான் தேர்வு செய்யும். உதாரணத்திற்க்கு இந்த பார்வை மாற்றம் எந்த உயிரியில் நடந்ததோ அந்த உயிரியின் வாழும் சூழலில், இந்த புது பார்வை அதன் பிழைத்திருக்கும் வாய்ப்பை சிறப்பாக்க உதவலாம். அப்படி ஆனது என்றால், டி.என்.எ பிரதி எடுப்பில் நடந்த அந்த  தவறு ‘நல்லது’ ஆகிறது. இந்த மாற்றம் பெற்ற உயிரிதான் அது வாழும் சூழலுக்கு சிறப்பாக தகவமைய பெற்றது என்பதால் அந்த உயிரி பிழைப்பதற்கும் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்க்கும் அதே இனத்தை சேர்ந்த மற்ற உயிரிகளை விட அதிக சாத்தியத்தை பெறுகிறது. இதில் அழகான விஷயம் என்னவென்றால் அதன் அடுத்தடுத்த தலைமுறைகளும்  அதே ‘நல்ல’ பார்வையை பெற்றிருக்கும். எதுவரை என்றால் எதோ ஒரு தலைமுறையில் அதே பார்வைக்கான ஜீனில் வேறொரு பிரதி எடுக்கும் தவறு நிகழும் வரை. அப்படி ஒரு தவறு நிகழ்ந்தால் அது நல்லதா கெட்டதா என்பது மீண்டும் இயற்கையால் தேர்ந்தேடுக்கப்பட்டு, நல்லது என்றால் அந்த பண்பு பல தலைமுறைகள் தொடர்ந்து கடத்தப்படும். இதில் எந்த விந்தையும் இல்லை. இயற்கையில் அப்படித்தான் நடக்க முடியும். இதை டி.என்.எ பற்றி எதுவுமே தெரியாமலே சொல்லி விட்டார்கள் டார்வினும் வாலஸும். அவர்களின் அறிவு எல்லாம் புதைபடிமங்களையும் வாழும் உயிரினங்களையும் நிரூபணங்களாக கொண்டது மட்டும்தான்.
இப்படி ஒரு உயிரியின் தலைமுறைகள் கடந்து செல்ல செல்ல டி.என்.எ வில் இயற்கையால் தேர்ந்தெடுக்கப்படும் தவறுகள் கூடிக்கொண்டே போகின்றன. இதனால் உயிரிகளின் பண்புகளும் மாறிக்கொண்டே போகின்றன. மில்லியன் கணக்கான வருடங்களில் இப்படி சேரும் மாற்றங்கள் ஒரு உயிரின வகையில் இருந்து இன்னொரு உயிரன வகையையே தோற்றுவிக்கின்றன. முதலில் இருந்த உயிரின வகையை விட இந்த இனம் வாழத்தான் சூழல் சரியாக இருக்கிறது. இப்படித்தான் ஒரு வகை குரங்கினத்தில் இருந்து மனித இனம் வந்தது. வேறொரு வகை பாலூட்டி இனத்திலிருந்து அந்த  குரங்கினம் வந்தது. ஒரு வகை ஊர்வனவற்றில் இருந்து அந்த பாலூட்டியினம் வந்தது. ஆரம்பத்தில் வந்த ஒரு செல் உயிரி வரை இப்படியே பின்னோக்கி செல்லலாம்.
ஒரு பிரம்மாண்டமான பார்வை இப்போது புலப்படும். அந்த ஒரு செல் உயிரியில் இருந்து நம்மிடம் வரை வந்திருப்பது டி.என்.எ மட்டுமே. நடுவில் அதை சுமந்த எல்லா உயிர்களும் இறந்து விட்டன. நாமும் இறந்து விடுவோம் நம் டி.என்.எ வை நம் தலைமுறைக்கு தந்துவிட்டு. அந்த வகையில் உயிர்கள் எல்லாம் டி.என்.எ வை பயணிக்க வைக்கும் எந்திரங்கள்தான். மனிதம் உட்பட உலகின் எல்லா உயிர்களின் உருவங்களும் பண்புகளும் வாழ்வுகளும் டி.என்.எ பிரதி எடுப்பில் பல மில்லியன் வருடங்களாக நிகழ்ந்த தவறுகளாலும் அவற்றை இயற்கை தேர்வு செய்ததாலும் வந்தவைதான். ஆக மொத்தம் எல்லாம் அக்யூமுலேடட் தவறுகள்தான். 
     இதுதான் படிவளர்ச்சி (Evolution) கொள்கையின் தொழில்நுட்ப சாராம்சம். சமூகம், பொருளாதாரம், தத்துவம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் என்று பல தளங்களில் இதன் அம்சங்கள் சுவாரஸ்யமானவை, முக்கியமானவை. இது வெறும் கருதுகோள் அல்ல.  புவி ஈர்ப்பு விசை என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவு வலிமையான உண்மை. இது இன்றி உயிரியலில் எதுவும்  புரிபடுவதில்லை. இந்த அறிவு சாதாரணமாக தெரியலாம். ஆனால் இதை நன்றாக மனதில் வைத்துக்கொண்டு உலகில் பயன்படுத்தி பார்க்க பார்க்க இன்னும் இன்னும் தெளிவாக புரிந்துவிடும். அந்த அளவுக்கு படிவளர்ச்சி புரிந்தபின் உலகின் பார்வையில் உயிர்வாழ்க்கையின் மகத்துவம் தொடர்ந்து உணரப்பட்டு கொண்டே இருக்கும். டார்வின் சொல்வது போல் there is grandeur in this view of life என்று புலப்படும்.

இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
புத்தகங்கள் சில: The Blind Watchmaker by Richard Dawkins, Narrow Roads of Gene Land  by Hamilton, On the Origin of Species by Charles Darwin
TV நிகழ்ச்சிகள்/Documentaries சில: Growing Up in the Universe, Are You Good or Evil, Out of Control, How You Really Make Decisions