Monday, July 7, 2014

அறிவியல் முறை – மனிதம் கண்ட மாபெரும் ஐடியா



     ஒரு கற்பனை. நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு மேலே சென்றால் விண்வெளிக்கு சென்று விடுவோம். அங்கு பூமியின் ஈர்ப்பு விசை மிகக்குறைவு. கிட்டத்தட்ட இல்லை என்றே கொள்வோம். அங்கு பொருட்கள் எப்படி இயங்கும் என்று யோசித்ததுண்டா? கொஞ்சம் முயன்று பாருங்கள். இப்படித்தான் இயங்கும்.
நேர்கோட்டில் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் ஒரு பொருள் அதே நேர்கோட்டில் அதே வேகத்தில்தான் சென்று கொண்டே இருக்கும். அதே போல ஒரு பொருள் சும்மா இருந்தால் சும்மாவேதான் இருக்கும். வேறொரு விசை அதன் மீது செயல்பட்டால்தான் அது மாறும். அவ்வளவுதான். இது ஒரு அறிவியலின் அடிப்படை விதி.
பூமியில் உள்ள பொருட்கள் எப்போதும் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டுதான் இருக்கின்றன என்பதால்தான் இதை சுலபமாக புரிந்துகொள்ள விண்வெளியில் நடப்பது போல கற்பனை செய்து கொள்ளலாம் என்றேன். கொஞ்சம் யோசித்து பார்த்தால் தினப்படி வாழ்க்கையின் சிக்கலான சூழல்களில் இருந்து விடுபட்ட ஒரு தூய்மையான எளிமையான கற்பனை இது என்பது புரியும். இதை இப்படி பலகாலம் உட்கார்ந்து யோசித்து கணிதம் கொண்டு ஆராய்ந்து ஆய்வுகள் மூலமாக நிரூபித்து காட்டி இருக்கிறார் நியூட்டன். இதெல்லாம் நடந்தது ஒரு 300 வருடங்களுக்கு முன்பு. (இப்படிப்பட்ட விதிகளை கண்டுபிடிக்க  வகை மற்றும் தொகை நுண்கணிதங்களை (Differential and Integral Calculus) கண்டுபிடித்து விட்டு, அவற்றை தனக்குள்ளாகவே பல நாட்கள் வைத்துக்கொண்டு வாழ்ந்திருகிறார் மனிதர்).
இந்த விதி பொருட்களின் இயக்கம் பற்றிய அடிப்படை இயற்பியல் விதிகளில் ஒன்று. இது பூமிக்கும் அதில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். இப்படி அடிப்படை இயற்பியல் விதிகள் சுமார் 500 வருடங்களாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் விளைவுதான் இன்றைய நவீன உலகம். அவற்றை நம் பள்ளி பாடங்களில் பெரிதாக அலட்டி கொள்ளாமல் கடந்திருக்கலாம். அவற்றை பற்றிய உண்மையான புரிதல் ஏற்படாமலேயே அல்லது ஏற்படுத்தப்படாமலேயே. பரிதாபத்துக்குரிய விஷயம்தான் இது. சரி இப்படிப்பட்ட அறிவியல் விதிகள் எப்படி கண்டுபிடிக்கப்படுகின்றன?
     அடிப்படை அறிவியல் விதிகள் கண்டுபிக்கும் முறை என்ன என்பதை உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிவியலாளர் ரிச்சர்ட் ஃ பெய்ன்மன் ஒரு வகுப்பில் மாணவர்களிடம் இவ்வாறு கூறுகிறார்.
     “முதலில் விதி அனுமானிக்கப்படுகிறது. (எல்லோரும் சிரிக்கிறார்கள்)  சிரிக்க வேண்டாம் உண்மையாகவே அப்படித்தான் என்கிறார், அதுதான் அனுமானம்  (கருதுகோள்/Hypothesis). அடுத்த படியாக அந்த அனுமானத்தை இயற்கையுடன் ஒப்பிட்டு அல்லது ஒரு ஆய்வாக (Experimentation) செய்து, அந்த கருதுகோள் ஆய்வுடன் ஒத்துபோகிறதா  என்று பார்க்கப்படுகிறது. இதுதான் நிரூபணம் (Proof). ஒத்துபோனால் அந்த கருதுகோள் அறிவியல் விதி (Scientific Law/ Physical law) ஆகிறது. இல்லை என்றால் அது வெறும் அனுமானம். அவ்வளவுதான். அந்த அனுமானம்  எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதோ அதை சொன்னவர் யார் என்பதோ தேவை இல்லாதது.மிக அருமையான விளக்கம். 
           இதில் அடுத்தபடியாக ஒரு மிக முக்கியமான படி ஒன்று உள்ளது. அதுதான் மற்ற அறிவியலாளர்களின் மறுபரிசீலனை (Peer Review). அதாவது மற்ற அறிவியலாளர்கள் அந்த புது விதியை அலசி ஆராய்ந்து, கேள்வி கேட்டு, நோண்டி நொங்கெடுத்து!  வேண்டுமென்றால் மீண்டும் ஒரு முறை ஆய்வே செய்து பார்த்து, அதை ஏற்றுக்கொள்வதை பற்றி முடிவு செய்வது. ஏனென்றால் அறிவியலில்  ‘நிரூபணம்’ என்பது முக்கியமாக மீண்டும் மீண்டும் செய்து பார்த்தாலும் வேலை செய்வதாக இருக்க வேண்டும்.
     சுருக்கமாக இதுதான் அறிவியல் முறை,
1.      இயற்கையை கவனித்து ஏன் அப்படி இயங்க வேண்டும் என்று அனுமானித்தல் – இது கற்பனை
2.      அனுமானத்தை ஆய்வு செய்து பார்த்தல் – இது நிரூபணம்
இப்படி கற்பனை நிரூபிக்கபட்டால் அதுதான் அறிவியல் உண்மை.
நிரூபணமானால் அடுத்த படி, அதை அறிவியல் சமூகத்திடம் காட்டி ஆராய செய்தல். அவர்களிடம் தேறினால் அது அறிவியல் உண்மையாக உலகிற்கு அறிவிக்கப்படும். Scientific Journalகள் இந்த கடைசி வேலையைதான் செய்கின்றன.
இப்படி ஒரு கடுமையான முறையில் அடையப்படுவதால்தான் அறிவியல் விதிகள் வேலை செய்கிறன.
ஆனாலும் இதிலும் தவறுகள் நடக்கலாம். அந்த தவறுகளை சரி  செய்வதும் இதிலேயே இருக்கிறது. நியூட்டனின் ஈர்ப்புவிதியை ஐன்ஸ்டீன் மாற்றி இன்னும் சிறந்த ஒரு ஈர்ப்பு விதியை சொன்னார். அதாவது புதிதாக ஒருவர் ஏற்கனவே நிரூபித்த ஒன்று தவறாக இருப்பதை நிரூபித்துக்காட்டினால், அந்த புதியவர் தந்த நிரூபணம் உண்மை எனவும் ஏற்கனவே இருந்த விளக்கம் தவறு எனவும் கொள்ள வேண்டும். இது முரண்பாடு அல்ல, முன்னேற்றம். சிறந்த உண்மையை நோக்கி நகர்தல். இதனால் எப்போதும் ஆகச்சிறந்த உண்மையை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது அறிவியல். அறிவியல் தன் குறைகளை தானே நிவர்த்தி செய்துகொள்கிறது.
உலகை அறிய முற்படும் ஒவ்வொருவரும் பல அனுமானங்களை உருவாக்கலாம். அவை ஆய்வு செய்யப்படாமலேயே ஏற்றுகொள்ளப்படுவது அபாயகரமானதாககூட மாறலாம். அதாவது அனுமானங்கள் பல தவறாக இருக்கலாம். அறிவியல் என்பது அந்த தவறுகளை களைந்து நிரூபணமாகும் அனுமாங்களை மட்டும் உண்மை என ஏற்றுக்கொள்ளும் முறை என்பது புரிந்திருக்கும். உண்மைகளை தேட இதை விட கவனமான ஒரு முறை இருப்பதாக தெரியவில்லை. இதுவரை மனிதம் அடைந்ததிலேயே சிறந்த சித்தாந்தமாக படுவது இதுதான்.
இந்த திடமான அறிவுதான் உலகையே மாற்றும் அளவிற்கு நமக்கு வல்லமை தந்துள்ளது. தொழிற்புரட்சி முதல் தொலைபேசி வரை, பசுமை புரட்சி முதல் தடுப்பூசி வரை, எல்லாம் அறிவியல் தந்தது தான்.
இதில் எல்லாவற்றையும் தீர கேள்வி கேட்டோ, நிரூபணம் பார்த்தோ, தர்க்க அறிவை பயன்படுத்தியோ அலசுவதும் பிறகு ஏற்றுகொள்வதை பற்றி முடிவு செய்வதும் அறிவியல் முறையில் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. இன்றைய உலகில் இதை செய்யாமல் நாம் எடுக்கும் முடிவுகள் பல குழப்பங்களை தந்துவிடுகின்றன. அதிர்ஷ்ட கல் முதல் ஆன்மா என்கிற கருத்து வரை பல விஷயங்களை வைத்து அரசியல் நடக்கிறது. அவற்றுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகிக்கொண்டுதான் இருக்கிறோம்.
இதைதான் அறிவியலாளர் கார்ல் சேகன் சொல்கிறார் “அறிவியல் தந்த பொருட்களை ஏற்றுக்கொண்டோம், அதன் வழிமுறையை மறந்து விட்டோம்” என்று.
முடிந்த வரை எதையும் ஆய்வு செய்ய துவங்கலாம். குறைந்த பட்சம் முடிந்த வரை. அது சுலபமல்ல. ஆனால் முயற்சி செய்யலாம். ஒரு செல்போன் வாங்குவதன்றால் நன்றாக யோசிப்போம், கேள்வி கேட்போம், தர்க்க அறிவை கொஞ்சம் உந்துவோம் அல்லவா. அந்த பண்பை கொஞ்சம் விரிவு செய்வோம்.
எதையும் அறிவியல் முறையில் ஆய்வு செய்வதே சிறந்தது. முடியாத பட்சத்தில், பதில் தெரிந்து கொள்ளாத விஷயங்களை ‘தெரியாத விஷயம்’ என்றே கொள்ளலாம். அதை பற்றிய தவறான நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்வதை விட ‘தெரியவில்லை’ என்று கொள்வதே சிறந்தது.
இதைதான் அறிவியலாளர் ரிச்சர்ட் ஃபெய்ன்மன் “விடைகள் தெரியாமல் என்னால் வாழ முடியும். தவறாக இருக்க வாய்ப்புள்ள நம்பிக்கைகளுடன் வாழ்வதை விட ‘விடைதெரியாதவனாக’ இருப்பதே சிறந்ததென கருதுகிறேன்” என்கிறார்.
     எதையும் இப்படி ஆய்வு செய்வதால் பலவற்றை அனுபவிக்க முடியாமல் போய்விடும் என்று பயப்படுவதும் சரியல்ல. அறிவியல் தரும் விந்தை அனுபவங்கள் அவ்வளவு இருக்கின்றன. இதுவரை அறிவியல் கண்டுபிடித்து தந்த பேரண்டத்தின் முடிவில்லா தொலைவுகளும் காலப்பெருங்கடலின் கற்பனைக்கெட்டா ஆழங்களும் தரும் பிரம்மாண்ட விந்தை உணர்வுகள் இருப்பை எப்போதும் ஆட்கொள்ளக்கூடியவை. இந்த விந்தை உணர்வு ஒன்றும் நாம் மூளைக்குள் நிகழும் வெறும் கற்பனையால் வருவது அல்ல. அது உண்மை என்ற உன்னத உணர்வு இணையில்லாதது. இந்த அறிவியல் தரும் விந்தை உணர்வுகளை பற்றி பலர் எழுதி இருக்கின்றனர். உதாரணமாக அறிவியலாளர் கார்ல் சேகனின் ‘Cosmos’, ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய ‘Unweaving the Rainbow’ ஆகிய புத்தகங்களை சொல்லலாம்.
     ரிச்சர்ட் டாகின்ஸ் சொல்லும் இந்த வரிகள் தரும் ஈர்ப்பு மகத்தானது. “உண்மையான உலகில் உண்மையான கவித்துவம் உள்ளது. அறிவியல் என்பது உண்மையின் கவிதை”.