Wednesday, May 21, 2014

வேட்பாளர் பேலியண்டாலஜி


 இது அட்மிஷன் காலம். அதை முன்னிட்டு ஒரு பதிவு. உங்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சி. இல்லையென்றால் பகிருங்கள். யாருக்காவது பயன்படலாம். சில தினங்களுக்கு முன் Mary Anning என்கின்ற பிரபல புதைபடிமவியலாளர் (Paleontologist) ஒருவரின் பிறந்தநாள். அதை முன்னிட்டு இந்த Google doodle பார்த்திருப்பீர்கள்.



 
இவர் பல முக்கியமான டைனோசர்களின் படிமங்களை (Fossils) கண்டெடுத்த பெருமைக்குரிய பெண்மணி. இவர் பங்களித்த இந்த புதைபடிமவியல் (பேலியண்டாலாஜி-Paleontology) துறை பற்றிதான் இந்த பதிவு. புதைபடிமவியல்  ஒன்றும் மொக்கையான துறை அல்ல.



 இதை தொல்லியல் துறையோடு (Archeology) குழப்ப வேண்டாம். அது மனித வரலாற்றை தோண்டுவதோடு நின்றுவிடுகிறது.  ஆனால் புதைபடிமவியல் ஒப்பிட முடியாத அளவிற்கு பெரிய அகலம் கொண்டது. உயிர்கள் எப்படி படிவளர்ச்சி பெற்று ஒரு செல் உயிரில் இருந்து இன்றைய சிக்கலான விதவிதமான அமைப்புகளை பெற்றன என்ற ஆராய்ச்சிகள் உலகளவில் பரவலாக நடைபெற்று வருகின்றன. அதன் சிம்மசொப்பணமே புதைபடிமங்கள்தான். இந்த துறையில் மேற்கத்தியவர்களின் ஆதிக்கத்தை தாண்டி இப்போது சீனர்களும் கொலோச்சுகின்றனர். சொல்லப்போனால் பல முக்கிய புதைபடிமங்கள் கடந்த சில பத்தாண்டுகளில் சீனாவிலிருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிமங்கள் சொற்பமே. என்னை பொறுத்தவரையில் இந்தியாவில் பல இடங்கள் இந்த புதைபடிமவியலார் பார்வையில் கவனிக்கப்பட்டால் பல முக்கிய புதைபடிம கண்டுபிடுப்புகளின் இருப்பிடமாக இந்தியாவும் மாறலாம். ஏனென்றால் புதைபடிமங்கள் நாட்டின் எல்லைகள் பற்றி கண்டுகொள்வதில்லை. எங்கும் பரவிக்கிடக்கின்றன.
 நம் வரலாற்றை பற்றி மட்டுமே எப்போதும் பெருமை பேசிக்கொள்ளும் நமக்கு, வரலாறு என்பதே எவ்வளவு சிறியது என்று யோசிப்பது சற்று கடினமே. அந்த கடினங்களை உடைத்தெறிந்து வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிரம்மாண்டத்தில் மூழ்கடிக்க  செய்துவிடுகிறது இந்த பேலியண்டாலாஜி.
 நமக்கு தெரிந்த மனித வரலாற்று கூறுகளான ஹரப்பா மொஹஞ்சதாரோ போன்ற மனித நாகரிக தொடக்கங்கள், எகிப்திய பிரமிடுகள், இந்தியாவின் ரிக்-யஜூர்-சாம-அதர்வண வேதங்கள், கிரேக்கத்தின் சாக்ரடிஸ்-பிளாட்டோ-அரிஸ்டாட்டில் போன்ற குரு சீடர்கள், நபிகள்-கிறிஸ்து-புத்தர் போன்ற கடவுள்கள், உலகை ஆண்ட அலெக்சாண்டர்-செங்கிஸ்கான்-நெப்போலியன் போன்ற மாமன்னர்கள், இந்தியாவில் இருந்த மௌரிய, குப்த, சேர, சோழ, பாண்டிய, முகலாய, ஆங்கிலேய மன்னர்கள், முதலாம் மற்றும் இரண்டாம்  உலகப்போர்கள் என எல்லாமே கி.மு சில ஆயிரங்கள் முதல் கி.பி 21 ஆம் நூற்றாண்டு வரையில் தான். (கி.மு கி.பி பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள தேவை இல்லை என்று நினைப்பவர்கள், கி.மு. 4000 தற்போதைய கி.பி 2014 இல் இருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முயன்று பாருங்கள். கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்தால் கீழே உள்ள படத்தை பயன்படுத்தலாம். 6000 ஆண்டுகள் என்று சுலபாமாக தெரிந்துவிடும். விருப்பம் இருந்தால் மேலே உள்ள வரலாற்று நிகழ்வுகளின் காலங்களை தேடிபார்த்து இந்த அளவுகோலில் பொருத்தி பார்க்கலாம்.)
 
 கண்டுபிக்கப்பட்ட பல புதைபடிமங்களின் வயதுடன் ஒப்பிட்டு பார்த்தால் புறக்கணிக்கத்தக்க அளவுதான் நமது இந்த சில ஆயிரம் ஆண்டுகால வரலாறு. உதாரணத்திற்கு டைனோசர்களின் ஜுராசிக் காலம் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது. நம் வரலாற்றின் ஆயிரங்கள்  எங்கே இந்த மில்லியன்கள் எங்கே. இப்படி நாம் படித்த வரலாறான சொற்பமான சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? மனித நாகரிகத்தின் ஆரம்பமான கற்காலத்திற்கு முன் எத்தனை கோடி ஆண்டுகள் என்ன சொல்ல காத்திருக்கின்றன? போன்ற கேள்விகளுக்கு நிரூபணங்களுடன் வலிந்து ஈர்க்கும் பதில்கள் தரும் பிரம்மாண்ட மனித முயற்சிதான் இந்த துறை.
 வரலாற்றில் இருந்து திறம்பட பாடம் கற்கும் நாம் இந்த வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் நடந்தவற்றிலிருந்தும் கற்றுக்கொள்ள எக்கச்சக்கமாக இருக்கிறது. ஒருவகையில் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? போன்ற மனித இனத்திற்கே உரித்தான கேள்விகளுக்கான  பதில்களின் ஆழங்களுக்கு இட்டு செல்கிறது இந்த துறையின் முன்னேற்றம்.  
  உதாரணத்திற்கு நம் கையை எடுத்துக்கொண்டால் தோளில் உள்ள ஒரு எலும்பு, அதன் பின் முழங்கையின் இரட்டை எலும்பு, அதன் பின் பல சிறிய எலும்புகள் எனும் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு எங்கிருந்து வந்தது என பார்த்தால் நம் மூதாதையர்களான குரங்குகள், அவற்றின் மூதாதையர்களான ஊர்வன என்று முற்காலத்து மீன்கள் வரை பல நூறு மில்லியன் ஆண்டுகள் பழைய  உயிரிகளில் இருந்து வருகிறது. 

  தோண்டி எடுக்கும் ஒவ்வொரு முக்கிய புதைப்படிமமும், மனிதர்களின் வேர்கள் எப்படி ஜாதி மதங்களை தாண்டி, தமிழன் இந்தியன் போன்ற மொழி அரசியல் எல்லைகளை தாண்டி  மொத்த மனிதத்தையும் உலகின் மற்ற எல்லா உயிர்களையும் இணைக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. இது எனக்கு ஆன்மீக உணர்வாகவே படுகிறது.
  முக்கியமான விஷயமே இதுதான். இந்த புதைபடிமங்களில் இருந்து அந்த உயிரிகளின் மூளையை பற்றியும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும். நாமும் அவற்றில் இருந்து வந்தோம் என்பதால் நமது மூளையை அவற்றுடன் ஒப்பிட்டு அதன் எந்த பகுதிகள் எந்த அளவுக்கு அந்த உயிரிகளின் மூளைகளில் இருந்தன என்றும் அறியலாம்.  நமது நல்ல மற்றும் கெட்ட உணர்வுகளின் வேர்களும் எங்கிருந்து வருகின்றன என்று இதில் புரிபட வாய்ப்பு அதிகரிக்கிறது. நம்முடைய உணர்வுகளைப் பற்றிய இந்த அளவு ஆழமான புரிதல்தான் அவற்றை வழிநடத்தும் சாத்தியங்களை பற்றி திறம்பட சிந்திக்க வைக்க முடியும். நாம் நமது வேர்களை இவ்வளவு ஆழமாக அறிவதால் தன்னம்பிக்கையும் அதே நேரத்தில் தன்னடக்கமும் சேர்ந்தே வருகிறது. அப்படி செய்வதுதானே உருப்படியான கல்வி. இத்தகைய கல்விதான் உண்மையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு சொந்தமான இந்த உலகை நடத்த தகுந்த தகுதியை மனித இனத்திற்கு தர இயலும். இது வரை ப்ரி.கே.ஜி மட்டுமே படித்த ஒருவர்  பேராசிரியர் பதவியில் பாடம் நடத்துவதை போலத்தான் நாம் உலகை நடத்தி வருகிறோம். உலகம் வெப்பமாதல் முதல் அனேக சமூக விரோத செயல்கள் வரை பல குழப்பங்களுக்கு நமது இந்த பொத்தலான  உலகை நடத்தும் தகுதியே காரணம்.
 
இந்த பேலியண்டலாஜி துறை நம்மை சிறப்பாக உலகை நடத்த தகுதி படுத்தும் பல பாடங்களில் முக்கிய பாடமாக படுகிறது.  உயிரியல் (Biology), மரபியல் (Genetics), உளவியல் (Psychology) என பல துறைகள் மீதும் கிளைகள் விரிக்கிறது இந்த துறை. நம்மூரில் அதிகம் வாய்ப்புகள் இல்லை என்ற அறியாமையில் ஒதுக்கப்படும் விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), நிலவியல் (Geology) ஆகிய படிப்புகளே இந்த துறைக்குள் நுழைய அடித்தளம். மொத்தத்தில் MBBS, BE, MBA, வேண்டாமென நினைக்கும் உலகின் விசாலத்தை முழுதும் அனுபவித்துவிடும் வேட்கை ததும்பும் இளம் தலைமுறையினர் சிந்திக்க தகுந்த வேட்பாளர் இந்த பேலியண்டலாஜி.


மேலும் இதைப்பற்றி அறிய
புத்தகங்கள் சில: Your Inner Fish by Neil Shubin, Evolution The Human Story & The Incredible Human Journey by Alice Roberts, On the Origin of Species by Charles Darwin
TV நிகழ்ச்சிகள்/ Documentaries சில : Origins of Us, Your Inner Fish, Rise of Animals, First Life, Charles Darwin and the Tree of Life, What Darwin Didn’t Know