Thursday, November 13, 2014

இன்டர்ஸ்டெல்லார் ஸ்பேஸ் - உயிரின் ஆரம்ப இடம்?




தற்போது ரொசெட்டா எனும் விண்கலம் வெற்றிகரமாக ஒரு குறிப்பிட்ட (குறிவைக்கப்பட்ட) வால் நட்சத்திரத்தில் இறங்கி உள்ளது. மனிதத்தின் இன்னொரு முக்கியமான சாதனை இது. வால் நட்சத்திரம் ஒரு நட்சத்திரம் அல்ல. அது ஒரு பெரிய பாறை போலத்தான். ஆனால் அதில் பனிக்கட்டியும் அதிகம் இருக்கும். வால் நட்சத்திரங்களும் மற்ற கிரகங்களை போல சூரியனை சுற்றி வருகின்றன. அப்படி சூரியனை நோக்கி ஒரு வால் நட்சத்திரம் செல்லும்போது அதிலுள்ள பனி ஆவியாகி வால் போல தெரிகிறது. அவ்வளவுதான். விண்கலம் எடுத்த புகைப்படங்களை இந்த லிங்கில் பாருங்கள். நம் பூமியில் உள்ள மரங்களற்ற  மலைச்சரிவுகள் போன்றதொரு இடம்.


இந்த விண்கலத்திற்கும் நம் பூமியில் முதன்முதலில் உயிர் தோன்றிய கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது.

மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல வகை புரதங்களால் (
Proteins) ஆனவை. இந்த புரதம் என்பது ஒரு மூலக்கூறு. அதனை உடைத்தால் அமினோ அமிலங்கள் என்னும் சிறிய மூலக்கூறுகள் கிடைக்கும்.

இப்படி  உடைவது தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு வயிற்றில் நேரும் கதி. இதைத்தான் நாம் சாப்பாடு ஜீரணம் ஆகிறது என்கிறோம். பின் ரத்தம் மூலம் இந்த சிறிய மூலக்கூறுகள் உடல் முழுதும் எடுத்துசெல்லப்பட்டு அங்கே மீண்டும் புரதமாக மாறுகின்றன. இப்படித்தான் நம் உடல் வாழ்கிறது.

சரி முதல் உயிர் எப்படி தோன்றி இருக்க முடியும்? முதலில் எளிய மூலக்கூறுகள் இணைந்துதானே பெரிய மூலக்கூறு உண்டாகி இருக்க முடியும்? இந்த அமினோ அமிலங்கள் முதலில் உண்டாகி இருந்தால்தான் அவை இணைந்து புரதங்களும், அதிலிருந்து டி என் எ வும்,  செல்களும் உயிர்களும் தோன்றியிருக்க முடியும். இதெல்லாம் நடப்பதற்கு சூழ்நிலை தூண்டல்கள் தேவை. பூமியில் இந்த தூண்டல்கள் கிடைத்து, அதனால் உயிர்கள் உண்டாகி இருக்கலாம்.

முக்கியமான விஷயம், இந்த அமினோ அமிலங்கள் பூமியில் மட்டுமல்ல, பிரபஞ்சப் பெருவெளியின் மற்ற பல இடங்களிலும்  எக்கச்சக்கமாக இருக்கின்றன. வால்நட்சத்திரங்களிலும் விண்கற்களிலும் உள்ளன. மேலும் நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட பேரிடைவெளிகளில் (
Interstellar space) அங்கங்கே மிகப்பெரும் மேகங்கள்போல திரண்டு உள்ளன.

உயிர்களின் அடிப்படை தேவையான அமினோ அமிலங்கள், இந்த அளவுக்கு பிரபஞ்சம் முழுக்க இருப்பதால், பூமி போன்ற எத்தனை கிரகங்களில் உயிர்கள் தோன்றி இருக்கின்றனவோ என்ற சிந்தனை வருதை தவிர்க்க முடிவதில்லை.

இந்த ரொசெட்டா விண்கலத்தின் ஒரு முக்கிய குறிக்கோள் இந்த வால் நட்சத்திரத்தில் இருக்கும் அமினோ அமிலங்களை பற்றியதுதான். இந்த மூலக்கூறுகளில்  சமச்சீரின்மை (
chirality) என்ற ஒரு வேதியியல் பண்பு உள்ளது. அதில் இரு வகைகள் உள்ளன. ஆனால் ஒருவகை சமச்சீரின்மை மட்டும் பிரபஞ்சத்தில் உள்ள அமினோ அமிலங்களில் மிகுந்து காணப்படுகிறது. அதற்கான காரணத்தை ஆராய்வது இந்த விண்கலத்தின் ஒரு நோக்கம். இது உயிர்களின் தோற்றம் பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்கலாம்.

இந்த ப்ராஜெக்ட், நாம் வாழும் காலம் எவ்வளவு உற்சாகம் ஊட்டும் காலம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது. அதாவது, உயிர்களின் தோற்றம்  போன்ற பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வம் வருவது மனித இயல்புதான். மனித இனம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களாக உள்ளது. ஆனால் மன்னனாகவே இருந்தாலும் இந்த ஒரு மில்லியன் வருடங்களில் கடைசி
50 வருடங்களுக்கு முன்பாக எப்போது பிறந்திருந்தாலும், இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேடி இருக்க முடியாது. அதை செய்வதற்கான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் வாய்க்கப்பெற்ற யுகத்தில் நாம் இருப்பதே உற்சாகமான விஷயம்தான்.

No comments:

Post a Comment