Saturday, November 15, 2014

மனித இனம் சிறப்பானதா? புறக்கணிக்கத்தக்கதா? அதன் எதிர்காலம் என்ன?

பூமியில் உள்ள மொத்த கடற்கரைகளிலும் உள்ள மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கை எவ்வளவோ அதை விட அதிக நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.


சரி நாம் வானத்தில் வெறும் கண்ணால் எத்தனை நட்சத்திரங்கள் பார்க்கிறோம்?
கடல்மணலில் விளையாடிய பிறகு கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் மணல்களின் எண்ணிக்கை எத்தனை தேறும்? சில ஆயிரங்கள் இருக்கும். அத்தனை நட்சத்திரங்களைத்தான் வெறும் கண்ணால் பார்க்கிறோம். தூரப்பார்வை கிட்டப்பார்வை கோஷ்டிகளுக்கு சற்று இந்த எண்ணிக்கை சரிவராமல் போகலாம்.
.
சரி எப்படி பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை, கண்ணால் பார்பவற்றை விட இவ்வளவு அதிகம் என்று கண்டுபிடித்தோம்? இவற்றை பூமியில் பல இடங்களில் தொலைநோக்கிகள் வைத்து பார்த்தது மட்டும் அல்லாமல் வானத்திலும் தொலைநோக்கிகள் செலுத்தி பார்த்து வருகிறோம். மேலும் இந்த நட்சத்திரங்களை பார்க்க கண்ணால் பார்க்கும் ஒளியை தவிர, பார்க்க முடியாத ஒளிகளான எக்ஸ் கதிர், காமா கதிர், அகச்சிவப்பு கதிர், மைக்ரோ அலைகள், ரேடியோ அலைகள் போன்றவற்றை வைத்தும் பார்க்கிறோம்.
.
இவற்றில் பெரும்பாலான நட்சத்திரங்களை சுற்றிவரும் கிரகங்கள் உள்ளன. அதில் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒரு கிரகத்தில் நாம் இருக்கிறோம். இந்த மகா பிரபஞ்சத்தில் நம் இடத்தை இப்படி புரிந்து கொண்டுள்ளோம். புறக்கணிக்கத்தக்க அளவு தொலைந்த மூலைதான் இது.
.
அந்த மற்ற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்று ஆராய்ந்து வருகிறோம். இன்னும் ஒரு சதவீத கிரகங்களை கூட ஆராயவில்லை. ஆனாலும் தேடிய சொற்ப அளவு கிரகங்களில் இதுவரைக்கும் உயிர்கள் இருக்கும் ஒரே கிரகம் என்று ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்ட கிரகம் நம் பூமிதான்.
.
நாகரிக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி பெற்று மற்ற கிரகங்களில் உயிர்களை தேடும் உயிரினமும் நம் பூமியில்தான் உள்ளது. இந்த காரணங்களால், என்னதான் பிரபஞ்ச பெருவெளியின்  புறக்கணிக்கத்தக்க மூலையில் இருந்தாலும், மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சிறப்பான இடத்தை பூமி பெறுகிறது.
.
இதை திறம்பட நடத்தவேண்டிய நாம்தான் நாம் அனைவரும் ஒரே இனம் என்பதை உணரவேண்டும். ஆனால் என் நாடு உன் நாடு என்று பூமியை கோடுபோட்டு பிரித்து வைத்திருக்கிறோம். ஒருவகையில் பார்த்தால் நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்றவையும் கூட இனப்பற்று, மதப்பற்று, ஜாதிப்பற்று போல பிரிவினைக்கு வழிவகுப்பவையே. நாம் மனித இனத்தின் உண்மையான மகத்துவத்தை இந்த சிறு சிறு விஷயங்களை மகத்துவம் என்றெண்ணி சிதரடிக்கிறோம். இதே போன்ற காரணங்களுக்காக நாளை போர் புரிந்து அணுகுண்டு வீச்சில் நம் இனத்தை நாமே அழித்துக்கொள்ளாமல் இருந்தால் சரி.
.
அறிவுள்ள உயிரினம் என்பது பிரபஞ்சத்தில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அரிதான விஷயம். பிரிவினைகள் பாராட்டுவதை தவிர்த்து இவ்வளவு அரிதான அறிவை நாம் ஒழுங்காக பயன்படுத்தினால் மட்டும்தான் மனித இனத்திற்கு எதிர்காலம்.

2 comments:

  1. அறிவுள்ள உயிரினம்... படிக்கவே எவ்வளவு அற்புதமாக இருக்கு.. ஹாஹா

    ReplyDelete
  2. Nice article with deep meaning

    ReplyDelete