Saturday, August 22, 2015

அறிவுப் புகாவெளி




இன்னும் நம் அறிவியல் அறிவு புகாத இடங்களில் இருப்பவற்றை பற்றி நாம் கொஞ்சம் அறிந்த கதை இது. 
சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் வேகத்தை எடுத்துக் கொள்வோம். சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் வேகமாகவும் தொலைவில் உள்ள கிரகம் மெதுவாகவும் சுற்றி வருகின்றன. இதற்கு காரணம் எளிமையானது. சூரியனின் ஈர்ப்பு விசை அதன் அருகில் அதிகமாகவும் அதை விட்டு தொலைவாக செல்ல செல்ல குறைவாகவும் உள்ளது. 
சூரியன் உட்பட சுமார் 2௦௦௦௦ கோடி (!!!) நட்சத்திரங்களின் கூட்டம்தான் பால்வழித்திரள். சூரியனை கிரகங்கள் சுற்றுவதை போலவே, பால்வழித்திரளின் மையத்தை கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. இந்த மையத்தில் ஒரு மிகப்பெரிய கருந்துளை (Supermassive black hole) ஒன்று உள்ளது. இதன் ஈர்ப்புவிசை அவ்வளவு அதிகம். இந்த மையத்தின் ஈர்ப்பு விசையும் அதிலிருந்து விலகி செல்ல செல்ல குறையும். அப்படி என்றால் அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களை விட தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மெதுவாக சுற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அவற்றின் வேகம் குறைவானதாக இல்லை. அவை வேகமாகத்தான் சுற்றுகின்றன. அப்படி அவை வேகமாகவே சுற்றுகின்றன என்றால் அவற்றின் மீது செயல்படும் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்க வேண்டும்.

இங்கு ஒன்றை சொல்லியாக வேண்டும். ஒரு பொருளுக்கு நிறை அதிகமானால் அதன் ஈர்ப்பு விசை அதிகமாகும்.

அப்படி என்றால் இந்த பால்வழிதிரளின் மையத்திலிருந்து தொலைவில் அமைந்த நட்சத்திரங்களின் கூடுதல் வேகத்திற்கு தேவையான அதிக ஈர்ப்பு விசையை தரக்கூடிய அளவுக்கு, மகா நிறை கொண்ட பொருள் ஒன்று இருந்தாக வேண்டும்.

பால்வழித்திரளில் இருக்கும் எல்லா நட்சத்திரங்கள், கிரகங்கள், மையத்திலுள்ள கருந்துளை என நாம் அறிந்த அனைத்தின் நிறையை சேர்த்தால்கூட இவ்வளவு ஈர்ப்பு விசை தரக்கூடிய நிறைக்கு ஐந்தில் ஒரு பங்குதான் வருகிறது. அப்படி என்றால் ஒரே வழிதான் உள்ளது. காணமுடியாமல் ஈர்ப்பு விசையை மட்டும் செலுத்தும் ஒரு பொருள் இருப்பதாக அனுமானிக்க வேண்டியதுதான். அப்படி அறிவியல் அனுமானித்த பொருள் தான் இருட்பொருள் (Dark matter). இது இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அனுமானிக்கப்பட்டுள்ளது அவ்வளவே. பிரபஞ்சத்தில் நாம் அவதானித்து அறிந்த எல்லாவற்றையும் விட ஐந்து  மடங்கு அதிகாமான ஒன்றை நம் இன்னும் கண்டுபிடிக்க வில்லை என்றால் நம் அறிந்தது எவ்வளவு குறைவு. ஆனாலும் இவ்வளவு தூரம் வந்திருப்பது பெருமைக்கான விஷயமே.

நம் அறிவியல் அறிவை பொறுத்தவரையில் இருட்பொருள் இன்னும் அறிவுப்புகா வெளியில்தான் உள்ளது.  நம் அறிவுப்புகா வெளியில் இதைவிட பெரிய இன்னும் ஒரு அனுமானமும் உள்ளது. அதை பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.

6 comments:

  1. கருந்துளை உடனான ஒளி மற்றும் காலத்தின் ஈர்ப்பு பற்றி சொல்லி இருக்கலாம்.

    வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete